கிராமப்புறங்களில் உள்ள மக்களை இணைத்து புதிய தொழில்நுட்பத்துடன் அனைத்தும் கிடைக்கும் வகையில் புதிய செயற்கைகோளை வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். அரசு பள்ளியில் படித்தால் எதுவும் கிடைக்காது என்று நினைப்பது முற்றிலும் தவறான நினைப்பு என்றும் கூறினார்.
இஸ்ரோ தலைவர் சிவன், இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மிக அதிகளவில் சக்தி வாய்ந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக கூறினார். இது கிராமப்புறங்களில் உள்ள மக்களை இணைத்து புதிய தொழில்நுட்பத்துடன் அனைத்தும் கிடைக்கும் வகையில் தயார்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மார்ச் மாதம் இறுதியில் ஜி.எஸ்.எல்.வி. ஏ1பி உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளது. இஸ்ரோவில் நாங்கள் தற்போது 150 திட்டங்கள் வைத்துள்ளோம். அதில் 126 முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள அனைத்தும் செயல்பாட்டில் உள்ளது. செயற்கைகோள்கள் தனியார் துறையில் உள்ளவர்கள் மூலம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் மற்ற பாகங்கள் மட்டுமே ஒரு சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆனால், தனியார் துறையின் ஈடுபாடு என்பது அதிகளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
இஸ்ரோவுக்குள் குறைந்த அளவு மட்டுமே வேலைவாய்ப்பு என்பதால், தனியார் துறையில் அதிகளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார். அரசு பள்ளியில் படித்தது என்பதைத் தாண்டி அரசு பள்ளியில் படித்தால் எதுவும் கிடைக்காது என்று நினைப்பது முற்றிலும் தவறான நினைப்பு. முயற்சி செய்தால் எங்கிருந்தாலும் எதுவும் கிடைக்கும். எனவே மாணவ - மாணவிகள் எதுவும முடியும் என்ற நோக்கத்தோடு படியுங்கள் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.