
புகழ்பெற்ற திருவண்ணாமலை கோவிலில் தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய தினங்களில் கிரிவலம் செல்லும் நோக்கில் பலஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் தற்போது கோடை விடுமுறை முடிவடையும் தருவாயில் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. விடுமுறை உள்ளிட்ட முக்கிய தினங்களில் அரசு சார்பில் திருவண்ணாமலை கோவிலுக்கு சிறப்பு பேருந்து, ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், 24 ஏக்கரில் பிரமாண்டமாகவும் அமைந்துள்ள திருவண்ணாமலை கோவிலின் பெயரை மாற்றுவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக இணையத்தில் பரவும் வீடியோவில், படிப்படியாக திருவண்ணாமலை கோவிலின் பெயர் அருணாச்சலேசுவரர் கோவில் என்று பெயர் மாற்றப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக கோவிலின் இணை ஆணையர் அளித்துள்ள விளக்கத்தில், 1940ம் ஆண்டு சைவ சித்தாந்தமகா சமாஜக் காரியதரிசி பாலசுப்பிரமணியனால் எழுதப்பட்ட திருவண்ணாமலை வரலாறு என்ற நூலில் இந்த கோவிலின் பெயர் ஸ்ரீ அருணாச்சலேசுவரர் தேவஸ்தானம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாகவே பக்தர்கள் இந்த கோவிலை அண்ணாமலையார் ஆலயம், அருணாச்சலேசுவரர் ஆலயம் என்று அழைத்து வருகின்றனர். கோவில் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்துள்ளார்.