
விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடு பெறவும், சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்கள் தேவையான ஆவணங்களைச் சரிபார்க்கும் வகையிலும் தமிழக காவல் துறை சார்பில் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள விபத்து வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நேற்றுத் தொடங்கப்பட்டது.
விபத்து வழக்குகளில் இழப்பீடு கோருபவர்களுக்கு உடனடியாக நிவாரணம் பெறுவதற்கு தேவையான முதல் தகவல் அறிக்கை, வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம், காப்புரிமை, வணிகத் தகுதி மற்றும் மோட்டார் வாகனத் தணிக்கைச் சான்றிதழ்கள், மருத்துவப் பிரேத பரிசோதனை, விபத்து நகல், இறுதி அறிக்கை போன்ற ஆவணங்களை காவல் நிலையங்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுலகத்தில், எஸ்.பி.முத்தரசி, விபத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை நேற்றுத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
“இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் விபத்து குறித்த தகவல்களை காப்பீட்டு நிறுவனங்கள், வழக்குகளை நடத்தும் வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இணையதளத்தில் எந்த நேரத்திலும் பார்க்க முடியும்.
இதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களை அணுகினால் அவர்களுக்கு தனி கடவுச் சொல் (பாஸ்வேர்டு) வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான விவரங்களை பார்த்துக் கொள்ள முடியும்.
இந்தப் பணி 20 தினங்களில் முடிவடையும். மார்ச் 31-ஆம் தேதி முதல் இணையதளத்தில் காப்பீட்டு நிறுவனங்களும், ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் பார்க்க முடியும்” என அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.