நகைக்கடைகளில் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா? மத்திய அரசு பதில்!

By Manikanda PrabuFirst Published Dec 5, 2023, 6:17 PM IST
Highlights

நகைக்கடை உரிமையாளர்களால் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா என ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், நகைக் கடைகளில் நுகர்வோரிடம் வாங்கப்படும் சேதாரம், செய்கூலி ஆகியவை உண்மைக்கு மாறாகத் தெரிவிக்கப்படுவது அரசுக்குத் தெரியுமா? என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.

“நகை செய்யும்போது ஏற்படுவதாக நகைக் கடை உரிமையாளர்கள் சொல்வது உண்மையான சேதாரம்தானா? அவர்கள் நகைத் தொழிலாளர்களுக்குத் தந்ததாகச் சொல்லி மக்களிடம் வசூலிக்கும் செய்கூலி என்பது உண்மையாக அவர்கள் கொடுத்த கூலியா? இதில் உள்ள முரண்பாடுகளைக் களைய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” என ரவிக்குமார் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.

Latest Videos

அதற்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதாரி அளித்துள்ள பதிலளித்துள்ளார். அதில், அத்தகைய புகார் எதுவும் அரசுக்கு வரவில்லை;  எடைபோடும் எந்திரங்கள் மாநில அரசுகளின்  Legal Metrology துறையைச் சேர்ந்த அதிகாரிகளால் ஒவ்வொரு ஆண்டும் பரிசோதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்கூலி, சேதாரம் என்பது தங்க நகை விற்பர்வர்களின் ஏக போக உரிமையாகப் போய்விட்டது இந்தியாவில். ஒரு பொருள் செய்தால், செய்த பொருளின் மூலப் பொருள் கழிவுகள் பெரும்பாலும் மறு சுழற்சி செய்து திரும்ப மூலப் பொருளாக மாற்றிக் கொள்ள இன்றைய விஞ்ஞான உத்திகள் நிறைய உண்டு. ஆனால் தங்கம் மட்டும் அதற்கு விதிவிலக்கு.

சமத்துவபுரங்களில் ஒற்றுமையாக வாழும் அனைத்து சமுதாய மக்கள்: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில்!

நகையை வடிவமைக்கும்போது சேதமாகும் (வீணாகும்) தங்க துகள்களுக்கு  சேதாரம் வசூலிக்கப்படுகிறது. இப்போது ஏறக்குறைய அனைத்து இயந்திரமயமாகிவிட்டதால் சேதாரமாகும் தங்கத்தின் அளவு மிகமிக குறைவுதான் என்ற போதிலும் சேதாரம் வசூலிக்கப்படுகிறது.

அது தவிர, பொற்கொல்லர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் செய்கூலி எனப்படுகிறது. கடைக்காரர் அவர்களுக்கு எவ்வளவு கூலி தருவார் என்பதை நம்மால் கணிக்க இயலாது. இதனை நாம் சரிபார்ப்பது கடினம். அத்துடன், நகை செய்வதற்காக ஒருவர் பணிக்கு வைத்திருக்கும் நபருக்கு நாம் எதற்காக ஊதியம் தர வேண்டும் என்ற கேள்வியும் பலருக்கு எழும். மேலும், செய்கூலி, சேதாரம் ஆகிய இரண்டும் நகைக்கடைகள் கொள்ளை அடிப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகளும் உள்ள நிலையில், மத்திய அரசு அதற்கு பதிலளித்துள்ளது.

click me!