வண்டியா இது? கோபத்தில் ஓலா ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய நபர்.. ஆம்பூரில் பரபரப்பு..!

By Kevin KaarkiFirst Published Apr 27, 2022, 9:35 AM IST
Highlights

ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 181 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என ஓலா நிறுவனம் தெரிவித்து இருந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆம்பூரில் வசித்து வருபவர் பிரித்விராஜ் கோபிநாதன். பிசியோதெரபிஸ்ட் ஆன இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஓலா S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினார். புதிய ஸ்கூட்டரை வாங்கியதில் இருந்தே, அதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. 

வாங்கிய சில நாட்களிலேயே ஸ்கூட்டரில் அதிக பிரச்சினைகள் ஏற்படுவதை கண்டு பிரித்விராஜ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 181 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என ஓலா நிறுவனம் தெரிவித்து இருந்தது. எனினும், இவர் பயன்படுத்தி வந்த ஸ்கூட்டர் 50 முதல் 60 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கி இருக்கிறது.

அடிக்கடி பிரச்சினை:

இதோடு பயணங்களின் நடுவில் திடீரென ஸ்கூட்டரில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து ஓலா வாடிக்கையாளர் சேவை மையத்தை பிரித்விராஜ் தொடர்பு கொண்டுள்ளார். ஓலா தரப்பில் இருந்து வந்தவர்கள் ஸ்கூட்டரை ஆய்வு செய்து, அதில் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்து சென்றுள்ளனர். 

OLA PLEASE CHANGE YOUR CUSTOMER CARE TO SOCIAL MEDIA pic.twitter.com/lZGvBHVbFK

— Prithv Raj (@PrithvR)

எனினும், அடிக்கடி ஓலா ஸ்கூட்டரில் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே சில நாட்களுக்கு முன் ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்து பயணித்துள்ளார். ஏற்கனவே ஸ்கூட்டரின் ரேன்ஜ் குறைவாக இருந்ததை அடுத்து, இம்முறை 40 கிலோமீட்டர்கள் சென்றதும் ஸ்கூட்டர் முழு சார்ஜ் தீர்ந்து ஷட் டவுன் ஆகி இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரித்விராஜ் கோபிநாத் தனது ஸ்கூட்டரை தீயிட்டு எரிக்க முடிவு செய்தார்.

தீ வைக்கப்பட்ட ஸ்கூட்டர்:

அதன்படி ஓலா ஸ்கூட்டரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, அதன் மீது பெட்ரோலை ஊற்றி, பின் தீ வைத்தார். இதில் ஸ்கூட்டர் முழுக்க தீ கொளுந்து விட்டு எரிந்தது. ஸ்கூட்டரை எரிக்கும் சம்பவங்கள் அனைத்தையும் பிரித்விராஜ் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நாடு முழுக்க பல இடங்களில் ஓலா ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில், வாடிக்கையாளர் தானே முன்வந்து ஸ்கூட்டரை எரித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கழுதை ஊர்வலம்:

முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓலா ஸ்கூட்டர் அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததாகவும், ஓலா தரப்பில் சரியான பதில் அளிக்கப்படவில்லை என வாடிக்கையாளர் கூறினார். மேலும் தனது ஓலா ஸ்கூட்டரில் கழுதயை கட்டி ஊர்வலமாக இழுத்து சென்றார். இதோடு ஓலா ஸ்கூட்டரை வாங்க வேண்டாம் என்றும் ஓலா நிறுவனத்தை யாரும் நம்ப வேண்டாம் என கூறும் பதாகைகளை ஓலா ஸ்கூட்டர் மற்றும் கழுதையில் தொங்க விட்டிருந்தார்.

click me!