தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் புதிய ஆய்வு முடிவுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கீழடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மாதிரிகள் உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டு இந்த முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
'இரும்பின் தொன்மை'
தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை' நூலினை வெளியிட்டு, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து கீழடி இணையதளத்தினைத் தொடங்கி வைக்கவும் செய்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
இலக்கியப் பெருமைகளை மெய்பித்து, பரந்துபட்டு வாழ்ந்த தமிழினத்தின் புதையுண்ட வரலாற்றை மீட்டெடுத்து, அறிவுலகத்துக்கு அறிவிக்கவேண்டும் என்றும்; வரலாற்றுப் படிப்பினைகள் வழியாக, முன்னேறும் நிகழ்காலத்தில் இருந்து, மேலும் சிறப்பான எதிர்காலத்துக்கு தமிழர்களை வழிநடத்த வேண்டும் என்றும், நம்முடைய உழைப்பை செலுத்தி வருகிறோம்! அந்த உணர்வோடுதான் நாம் இங்கு கூடியிருக்கிறோம்!
தமிழ்ப் பண்பாட்டை உலகுக்குச் சொல்லும் விழா
ஐம்பெரும் விழாவாக இந்த விழாவை நடத்திக்கொண்டு இருக்கிறோம். இரும்பின் தொன்மையை நாட்டுக்கு அறிவித்தல் , ’இரும்பின் தொன்மை’ நூலை வெளியிடுதல்., கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கும், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கும் அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையத் தளத்தைத் தொடங்கி வைத்தல் என்று தமிழ்ப் பண்பாட்டை உலகுக்குச் சொல்லும் விழாவாக இந்த விழா சிறப்பாக நடந்துக்கொண்டு இருக்கிறது! இந்த விழாவின் மூலம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக நேற்று சொல்லியிருந்தேன் பலரும் என்ன அறிவிப்பு என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு வருகின்றவரையில் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தமிழர்களின் தொன்மையை உலகத்திற்கே சொல்லும் ஒரு மாபெரும் ஆய்வுப் பிரகடனத்தை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன் இங்கு கூடியிருப்பவர்களும், நேரலையில் இந்த விழாவை பார்ப்பவர்களும் கவனமாக கேளுங்கள். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது! இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல. உலகிற்கே மீண்டும் சொல்கிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனத்தை இந்த நிகழ்ச்சி வாயிலாக அறிவிக்கிறேன்!
’உருக்கு இரும்பு தொழில்நுட்பம்’
5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பே ’உருக்கு இரும்பு தொழில்நுட்பம்’ தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது! இப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000-ஆம் ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகம் ஆகியிருக்கிறது என்று என்று உறுதியாக சொல்லலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புனே நகரில் இருக்கும் பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும் பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான அமெரிக்க நாட்டின் ஃபுளோரிடா மாநிலத்தில் இருக்கும் பீட்டா ஆய்வகத்துக்கும் – மாதிரிகள், பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தேசிய நிறுவனங்களில் OSL பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப் பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியிலிருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம். இப்படியான மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பி பெறப்பட்ட முடிவுகளை, கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கிறது. இப்போது கிடைத்திருக்கும் கதிரியக்கக் காலக்கணக்கீடுகள் மற்றும் OSL பகுப்பாய்வு காலக்கணக்கீடுகள் அடிப்படையில் கி.மு. 3345-லேயே, தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என்று தெரிய வருகிறது.
ஆய்வாளர்களுக்கு புதிய உத்வேகம்
இந்த பகுப்பாய்வு முடிவுகள், வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் இருக்கும் தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் இரும்பின் தோற்றத்தையும் பண்டைய தொழில்நுட்பத்தைப் பற்றியும் ஆய்வு செய்துவரும் அறிஞர் பெருமக்கள். அந்த அறிஞர் பெருமக்கள் எல்லோரும் இந்த அவையில் கூடியிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒருசேர தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஆய்வு முன்னெடுப்புகளையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள். இரும்பின் காலம் குறித்த முடிவுகளுக்கு ஆதரவாகவும் – கண்டுபிடிப்புகளை பாராட்டியும் இருக்கிறார்கள். இது போன்று பகுப்பாய்வு முடிவுகள் ஆய்வாளர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது.
இந்தப் பெருமையை நம்முடைய குழந்தைகளிடம் நாம் எடுத்துச் சொல்லவேண்டும். இப்படிப்பட்ட பெருமைமிக்க தமிழ்ச்சமூகம், உலகுக்கே வழிகாட்டும் அறிவார்ந்த சமூகமாக வளரவேண்டும் என்று எதிர்காலத்துக்கான திசையை காட்டவேண்டும்! பழம்பெருமையை பேசுவது என்பது புது சாதனைகள் படைக்க ஊக்கமாக அமைய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.