
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உள்ள 1723 கிராமங்களிலும் வீடுகள்தோறும் இணையச் சேவை தொடங்கப்பட உள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட ஆய்வு பணி நடைபெற இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தனி வட்டாட்சியர் பி.ரமேஷ் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் 1,723 கிராமங்களிலும் வீடுகள்தோறும் இணையச் சேவையைத் தொடங்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் முதல் கட்ட ஆய்வுப் பணி நடைபெற இருக்கிறது.
எனவே, மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் கேபிள் டிவி வட்டாட்சியர் சிறப்பு முகாம்களை நடத்தி 18 வட்டாரப் பயிற்றுநர்களை தேர்வு செய்து வருகிறார். மேலும், கணக்கெடுப்புப் பணிக்காக ஒவ்வொரு கிராமங்களிலும் ஒருவர் வீதம் 1723 தொழில்நுட்பப் பணியாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சியளித்து வருகின்றனர்.
அதன்படி, திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள 67 கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் திருவண்ணாமலை மாவட்ட தனி வட்டாட்சியர் பி.ரமேஷ் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர், தேர்வு செய்யப்பட்ட தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு கேபிள் டிவி தொழில்நுட்ப உதவியாளர் பூவரசன் பயிற்சியளித்தார்.
இதுகுறித்து வட்டாட்சியர் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “மாவட்டம் முழுவதும் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் அந்தந்த கிராம ஊராட்சிகளில் வசிக்கும் துடிப்பான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, இரண்டு நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இதில் பயிற்சிப் பெற்ற பணியாளர்கள் வரும் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் முதற்கட்ட கணக்கெடுப்பு செய்து அறிக்கையை அளிப்பர். அந்த அறிக்கை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பப்படும்.
பின்னர், தமிழக அரசின் உத்தரவின்பேரில் விரைவில் வீடுகள்தோறும் இணைய சேவை தொடங்கப்படும்” என்று கூறினார்.