கடலூரில் ரூ.42 கோடி செலவில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்; அரசு அனுமதியும், நிதியும் வழங்கியது..

 
Published : May 18, 2017, 10:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
கடலூரில் ரூ.42 கோடி செலவில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்; அரசு அனுமதியும், நிதியும் வழங்கியது..

சுருக்கம்

Integrated rainwater drainage at Rs 42 crore in Cuddalore Government sanction and funding

கடலூர்

கடலூர் நகராட்சியில் ரூ.42 கோடி செலவில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க அரசு அனுமதியும், நிதியும் வழங்கியுள்ளது என்று கடலூர் பெருநகராட்சி ஆணையர் செ.விஜயகுமார் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு கெடிலம், தென்பெண்ணை ஆறுகளின் வடிகாலான கடலூரில் அதிக சேதம் ஏற்பட்டது.

கெடிலம் ஆற்றில் வந்த வெள்ளம் நகருக்குள் புகுந்ததால் 15 நாள்களுக்கும் மேலாக வெள்ள நீர் வடிய வழியில்லாமல் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியது. எனவே, கடலூர் நகராட்சிப் பகுதியில் ஒருங்கிணைந்த வடிகால் வசதி தேவை என கோரிக்கை எழுந்தது.

வெள்ள சேதத்தைப் பார்வையிட வந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளும் அக்கருத்தை வெளியிட்டு அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடலூர் நகராட்சியால் எந்தெந்தப் பகுதிகளில் வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக ரூ.42 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்துவதற்கான அனுமதியை மாநில அரசு வழங்கியுள்து.

இதுகுறித்து கடலூர் பெருநகராட்சி ஆணையர் செ.விஜயகுமார் கூறியது:

முதல்கட்டமாக மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும். இதற்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடும், அதற்கான நிர்வாக அனுமதியையும் அரசு வழங்கியுள்ளது.

இதில் 80 சதவீதம் அரசு நிதியாகவும், தலா 10 சதவீதம் கடன் மற்றும் நகராட்சி பங்களிப்பாகவும் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி செம்மண்டலம், தேவனாம்பட்டினம் பகுதிகளில் தற்போது உள்ள வடிகால்களில் தேவைப்படும் இடங்களில் பழையவற்றை அப்புறப்படுத்தி புதிய கால்வாயும், மற்ற இடங்களில் பழைய கால்வாயும் சீரமைக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக மற்றத் துறைகளுக்கும் அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இந்தப் பணிகளுக்கான ஒப்புந்தப்புள்ளி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். அதனைத் தொடர்ந்து வரும் மழைக்காலத்துக்குள் பணியைத் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் வணிக வளாகக் கட்டுமானப் பணிகள் 2 மாதங்களில் நிறைவு பெறும். மேல்தளத்தில் கடைகளின் வாடகை, முன்பணம் கூடுதலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதுகுறித்தும் ஆய்வுக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ரு கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!