சேதுபதி மன்னர்கள் காலத்தை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு; அரசு பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்...

Asianet News Tamil  
Published : May 04, 2018, 10:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
சேதுபதி மன்னர்கள் காலத்தை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு; அரசு பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்...

சுருக்கம்

Inscription of the Sethupathi kings period found by government school students

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சேதுபதி மன்னர்கள் காலத்தை சேர்ந்த சூலக்கல் என்னும் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர். இதனால், மாணவர்களுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே வேளானூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் முனியசாமி இப்பள்ளி மாணவர்களுக்கு வரலாற்றுத் தேடலில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். 

இந்த நிலையில் கோடை விடுமுறை நாட்களை பயனுள்ள வகையில் கழிக்க இப்பள்ளி மாணவர்கள் வரலாற்று தேடலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த மாணவர்கள் இப்பகுதியில் கி.பி.12-13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப்பானை ஓடுகள், மணிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து உள்ளனர். 

தற்போது 7-ஆம் வகுப்பு மாணவர்கள் சத்தியேந்திரன், யுவராஜ், விஷால், அருள்தாஸ், 6-ஆம் வகுப்பு மாணவர் ஆகாஷ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மேலமடையில் சேதுபதிகள் கால சூலக்கல் கல்வெட்டை கண்டுபிடித்து ஆசிரியர் முனியசாமியிடம் தெரிவித்துள்ளனர்.

அவர் இதுபற்றி இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுருவுக்கு கொடுத்த தகவலின்பேரில் அக்கல்வெட்டு படி எடுக்கப்பட்டது. 

இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் ராஜகுரு, "மாணவர்கள் கண்டுபிடித்த சூலக்கல் கல்வெட்டு, வேளானூர் அருகில் உள்ள மேலமடையின் மேற்கே கிழவனேரி கள்ளித்திடலில் நட்டு வைக்கப்பட்டுள்ளது. 

சூலக்கல் என்பது சிவன் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தின் நான்கு மூலைகளிலும் வைக்கப்படும் எல்லைக்கல் ஆகும். இங்கு ஒரே ஒரு சூலக்கல் மட்டுமே உள்ளது.

மூன்று அடி உயரமும், ஒரு அடி அகலமும் உள்ள இது கடல்பாறையால் ஆனது. இதில் புடைப்புச் சிற்பமாக திரிசூலம், பிறை, சூரியன் பொறிக்கப்பட்டுஉள்ளது. அதன் கீழ் இரு பக்கங்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. 

எழுத்துகள் ஆழமில்லாமல் வெட்டப்பட்டுள்ளதால் தேய்ந்துள்ளன. சில எழுத்துக்களையே படிக்க முடிகிறது. ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் இதில் விசைய எனும் தமிழ் ஆண்டும்  பங்குனி மாதமும் தெளிவாக உள்ளன.

சேதுபதி மன்னர்கள் காலத்தை சேர்ந்த இக்கல்வெட்டின் காலம் கி.பி.1714 ஆக இருக்கலாம். இது திருவுடையத்தேவர் என்ற முத்து விஜயரகுநாத சேதுபதி காலத்தைச் சேர்ந்தது. கீழக்கரை அல்லது உத்தரகோசமங்கை சிவன் கோவிலுக்கு இந்தநிலம் தானமாக வழங்கப்பட்டு இருக்கலாம். 

சேதுபதிகள் காலத்தில் நிலதானம் வழங்கப்பட்ட விவரம் செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டு, அந்த நிலம் உள்ள இடத்தில் திரிசூலக்கல் நடுவது வழக்கம். எனவே, சூலக்கல் நட்டு வைக்கப்பட்டுள்ள இடம் கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட பகுதி என்பதை அறியலாம்" என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அரசு வேலையில் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை..? முதல்வரின் ஏமாற்று அறிவிப்பு.. அண்ணாமலை விமர்சனம்
ரஜிதாவுக்கு தெரியாமல் ரீனாவுடன் செல்வக்குமார்.! பார்க்கில் 17 வயது சிறுவன் செய்த சம்பவம்! சென்னையில் அதிர்ச்சி!