மேயர், தலைவர் பதவியிடங்களுக்கு மார்ச் 4ல் மறைமுகத் தேர்தல்... அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம்!!

Published : Feb 25, 2022, 06:43 PM IST
மேயர், தலைவர் பதவியிடங்களுக்கு மார்ச் 4ல் மறைமுகத் தேர்தல்... அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம்!!

சுருக்கம்

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வது குறித்தும் மாநகராட்சிகளுக்கான மேயர்/துணை மேயர் மற்றும் நகராட்சி/பேரூராட்சிகளுக்கான தலைவர்/துணைத் தலைவர் தேர்தல் நடத்துவது குறித்தும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் 19.02.2022 அன்று நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் 22.02.2022 அன்று அறிவிக்கப்பட்டன.

மேற்படி தேர்தல்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 02.03.2022  அன்று தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஆணையாளர்/செயல் அலுவலர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். மாநகராட்சி மேயர், நகராட்சி/பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் 04.03.2022 அன்று முற்பகல் 09.30 மணிக்கு தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கூட்டப்பட்டு அன்றைய தினமே மேற்படி தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு போட்டி இருப்பின் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்.

மேலும், மாநகராட்சி துணை மேயர், நகராட்சி/பேரூராட்சி துணை தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் அன்றைய நாளிலேயே பிற்பகல் 02.30மணிக்கு தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கூட்டப்பட்டு அன்றைய தினமே மேற்படி தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு போட்டி இருப்பின் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 02,03.2022 அன்று பதவி ஏற்றுக் கொள்ளவும் 04.03.2022 அன்று நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் கலந்து கொண்டு மேற்படி தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற தங்கள் ஒத்துழைப்பினை தரும்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்கிறது.

PREV
click me!

Recommended Stories

ரூ.18 கோடி வரி செலுத்துங்கள்..! பிரியாணி மாஸ்டரை அதிர வைத்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!