தமிழக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.267 கோடி... விடுவித்தது மத்திய அரசு!!

By Narendran SFirst Published Feb 25, 2022, 5:31 PM IST
Highlights

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து, மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.267 கோடியை விடுவித்துள்ளது. 

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து, மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.267 கோடியை விடுவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த காரணத்தால் மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய மானியத்தை நிறுத்தி வைத்திருந்தது. தொடர்ந்து பல வருடங்களாக நீதிமன்ற வழக்கு காரணமாக தேர்தல் நடக்கவில்லை என்றும் குறிப்பிட்டு தமிழக அரசு  அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,607 வார்டுகளுக்கு கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியதுடன் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் பிடித்தது. இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதத்திலும் திமுக மிகப் பெரிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக இரண்டாவது இடத்தில் உள்ளது. பாஜக கவனிக்கத்தக்க வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இதையடுத்து, மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.267 கோடியை விடுவித்துள்ளது. இந்த நிதி நகர்ப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த தொகையில் 50 சதவீதம் குடிதண்ணீருக்காக பயன்படுத்த வேண்டும் என்றும், 50 சதவீதம் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு பயன்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!