
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த அமைதி நிலைத்திருக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர், மாலை 6 மணி அளவில் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியானதும், அதனை வரவேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்திய ராணுவத்துடன் தமிழகம் ஒற்றுமையுடன் அணிவகுத்துச் சென்றது. போர் நிறுத்தம் வரவேற்கத்தக்க நடவடிக்கை. அமைதி நிலைத்திருக்கட்டும். நமது எல்லைகளைக் காக்கும் ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு எங்கள் மனமார்ந்த வணக்கம்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ இயக்குநர் ஜெனரல்களுக்கு மத்தியில் நடந்த பேச்சில், இரு தரப்பினரும் அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்து ஒப்புக்கொள்ளப்பட்டது. பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு முக்கியமான படியாக இது இருக்கும் என வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதிப்படுத்தினார்.
இரு தரப்பினரும் நிலம், கடல் மற்றும் வான்வழியில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒப்புக்கொண்டிருப்பதாகவும் இந்திய நேரப்படி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது என்றும் மிஸ்ரி குறிப்பிட்டார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று தனது சமூக வலைத்தளப் பதிவில் அறிவித்திருந்தார். சிறிது நேரத்தில் இந்திய அரசும் அதனை உறுதிப்படுத்தியது.