
கடந்த 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையெடுத்து பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் தவித்தனர். பின்னர், வரும் டிசம்பர் 30ம் தேதி வரை, அனைத்து தபால் நிலையங்கள், வங்கிகள் மூலம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், வங்கிகளில் பணத்தை மாற்றும்போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல் கொண்டு செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை, வங்கியில் கொடுத்து மாற்றுவதற்காக படையெடுத்து செல்கின்றனர்.
வங்கிகளுக்கு படித்தவர்கள் மட்டுமின்றி, படிக்காத பாமர மக்களும் செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்களிடம் ஒரு படிவத்தை கொடுத்து, அதனை பூர்த்தி செய்த பிறகே பணம் தரமுடியும் என வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால், படிக்க தெரியதவர்களின் நிலை கடும் திண்டாட்டம் ஆகிறது.
இதற்கிடையில், பணத்தை வைத்து கொண்டு மாற்ற முடியாமல் இருந்த பெரும் பணக்காரர்கள், அன்று இரவோடு இரவாக சென்னை நகரில் உள்ள அனைத்து நகைக்கடைகளிலும் திரண்டனர். அன்று இரவோடு இரவாக அனைத்து நகைகளும், கடைகளில் வியாபாரம் ஆனது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பாரிமுனையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். சவுகார்பேட்டையிலும் ரெய்டு நடத்தினர்.
இதேபோல், ஹவாலா பணம் மாற்றத்தில் ஈடுபடும் நபர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். 500, 1000 நோட்டுகள் மாற்றுவதில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.