Chennai Flood: எந்தெந்த மாவட்டங்களில் மழை கொட்டும், இடிக்கும்..? எங்கெங்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட்..?

By Asianet TamilFirst Published Nov 10, 2021, 8:35 AM IST
Highlights

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு அக்டோபர் 26 அன்று தொடங்கியது. தொடங்கியது முதலே வெளுத்து வாங்கி வருகிறது மழை. கடந்த 6-ஆம் தேதி சென்னையில் விடியவிடிய ஒரே நாளில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவானது. இதனால், சென்னை மாநகரமே வெள்ளக் காடானது. அதன் தொடர்ச்சியாக ஒரு சில மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில்தான் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பருவமழையின் தீவிரம் 12-ஆம் தேதி வரை இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், சில இடங்களில் அதி கனமழையும் பெய்யலாம். எனவே இந்த மாவட்டங்களில் அதிக கனமழை இருக்கும் என்பதால் 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

இதேபோல திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யலாம் என்பதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் சென்னையில் ஏற்கெனவே 6-ஆம் தேதி மிகக் கன மழை பெய்த நிலையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை அதிக கன மழை பெய்யும் என் எதிர்பார்க்கப்படுவதால், இந்த ஐந்து மாவட்டங்களுக்கும் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் ஆரஞ்சு அலர்ட் நாளை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வருவாய் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

click me!