
திருப்பூர்
திருப்பூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியதால் பகல் நேரத்தில் வீதியில் நடமாட முடியாமலும், வாகனங்களில் பயணிக்க முடியாமலும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
கோடை காலம் தொடங்கிய நிலையில் திருப்பூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலால் வீட்டில் இருந்து வெளியே வரவே தயங்குகின்றனர் மக்கள்.
காலை 8 மணிக்கே வெயில் வாட்டி வெளுத்து வாங்குகிறது. வீட்டில் இருந்தாலும் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் புழுக்கத்தில் மக்கள் அவதி அடைகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் அனல் காற்று வீசுவதால் கடுமையாக பாதிப்பை சந்திக்கின்றனர்.
வெயிலின் உக்கிரத்தை சமாளிக்கும் வகையில் இளநீர், மோர், கம்பங்கூழ், கரும்புச்சாறு குடித்து வருகின்றனர். நுங்கு, தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றில் கூட மக்கள் நாட்டம் காட்டுவதால் வியாபாரம் களைகட்டியுள்ளது.
பகல் நேரத்தில் வெளியில் சென்ற பெண்கள் குடை பிடித்தபடியும், இளம்பெண்கள் துப்பட்டாவால் தலையை மூடியபடியும் வெளியில் சென்றனர்.
திருப்பூரில் நேற்று மட்டும் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் நேற்று பகலில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள். பல்வேறு வேலை காரணமாக வெளியில் சென்று வந்தவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
கோடை வெயிலின் உச்சகட்டமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம் வருகிறது. அந்த காலத்தில் வெயிலின் தாக்கம் இதைவிட கடுமையாக இருக்கும். சாதாரண நாட்களிலேயே இந்த அளவில் வறுத்தெடுக்கும் வெயில், அக்னி நட்சத்திர காலத்தில் எப்படி இருக்குமோ என்று மக்கள் அச்சம் அடைகின்றனர்.