
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6 கோடியே 97 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறைக் கொண்டு செயல்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்து பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாவது இடம் பெறுபவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாவது இடம் பெறுபவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 27 ஆயிரத்து 880 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், 482 பேருக்கு இலவச பேருந்து பயண அட்டை, 123 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியத்துடன் வங்கி கடனாக ரூ.12 இலட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விலையில்லா மூன்று சக்கர வண்டி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம் உள்பட பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 366 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.11 இலட்சத்து 27 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
முப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என ஆக மொத்தம் ரூ.6 கோடியே 97 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.