
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய டிராக்டர் ஓட்டுநரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். மணல் அள்ளப் பயன்படுத்திய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் சனவேலி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுகிறது என்ற தகவல் ஆர்.எஸ் மங்கலம் காவலாளர்களுக்கு கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் காவல்துறை சார்பு-ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு பார்த்தபோது, ஆற்றில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக டிராக்டரில் மணல் அள்ளப்படுவது உறுதியானது.
இதனையடுத்து சனவேலி ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த டிராக்டர் ஓட்டுநரான சேத்திடல் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (28) என்பவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
மேலும், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிந்து சூர்யாவிடம் காவலாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.