
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை போலீசார் லத்தியால் தாக்கியதில் மண்டை உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம் செருகோல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில், கல்லுப்பாலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த திருவட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார் அவ்வழியாக வந்த பல இருசக்கர வாகனங்களோடு ராஜேஷின் வாகனத்தையும் சேர்த்து தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதைபார்த்த ராஜேஷ் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் செல்ல முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் தேவராஜ், வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ராஜேஷை லத்தியால் ஓங்கி அடித்தார்.
இதில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அங்கே இருந்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 2 காவலர்களின் சட்டைகளை கிழித்து சிறைபிடித்தனர்.
இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளான ராஜேஷை பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜேஷை காவலர் லத்தியால் தாக்கும் வீடியோ காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.