2 தொகுதி.. விழுப்புரம், சிதம்பரத்தில் மீண்டும் போட்டி.. பானை சின்னம்.. விசிக திருமாவளவன் சொன்ன அப்டேட்!!

By Raghupati R  |  First Published Mar 8, 2024, 2:35 PM IST

விழுப்புரம், சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிடுகிறது. சொந்த சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடப்போவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


மக்களவை தேர்தலையொட்டி திமுக அதன் கூட்டணி கட்சிகளிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை கொண்ட விருப்ப பட்டியலை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் விசிக அளித்ததாக தகவல் வெளியானது. சிதம்பரம், விழுப்புரம், காஞ்சி, திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகளை திமுகவிடம் விருப்ப பட்டியலாக விசிக அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் கொமதேக,  ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் திமுக மற்றும் விசிக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

Latest Videos

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டனர். பிறகு இதனையடுத்து, திமுக - விசிக இடையிலான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.  அதன்படி, திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட சிதம்பரம்,  விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் இந்த முறை விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “திமுக கூட்டணியில் விசிகவுக்கு சிதம்பரம்,  விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகள் கையெழுத்தானது.  

2 தனி தொகுதி,  ஒரு பொது தொகுதி கேட்டிருந்த நிலையில், 2 தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனி சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இன்னும் தகவல் வரவில்லை.  நிச்சயம் விசிக தனி சின்னத்தில் தான் போட்டியிடும். 2019 தேர்தலில் கையாண்ட பகிர்வு முறைபோல் இந்த முறையும் கையாளப்பட்டது” என்று கூறினார்.

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

click me!