அப்பாடா.. ஒருவழியாக திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது! தனி சின்னத்தில் போட்டி!

By vinoth kumarFirst Published Mar 8, 2024, 12:40 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலின் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டி வருகிறது.

மக்களவை தேர்தலில் திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம்  முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ஒரு மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுகிறது. 

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறது.  அந்த வகையில் தமிழகத்தில் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ஆளுங்கட்சியான திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை கொண்டுள்ளது. இந்த கட்சியுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முஸ்லிம் லீக், கொமதேக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இன்னும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மதிமுகவை பொறுத்தவரை இரண்டு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் திமுக தரப்பு ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே தரப்படும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என உறுதியாக தெரிவித்துவிட்டது. 

இந்நிலையில், நேற்று காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு திமுகவுடனே கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், திமுக தரும் ஒரு தொகுதி  தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கூறினர். 

இந்நிலையில், திமுக - மதிமுக தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

click me!