
வேலூர்
ஒரு பணியிட மாறுதலுக்கு ரூ.10 இலட்சம் கொடுக்கும் அளவுக்கு தமிழகத்தில் புதிய அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது என்று வேலூரில் நடைப்பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.
வேலூரில் உள்ள நகர அரங்கத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்குச் சங்கத்தின் மாநில முன்னாள் தலைவர் சின்ராசு தலைமை வகித்தார். வேலூர் மாவட்ட தலைவர் சண்முகம் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் பங்கேற்றார்.
கடந்த 2007-ம் ஆண்டு காஞ்சீபுரம் அருகே வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் பலியான 9 கிராம நிர்வாக அலுவலர்களின் புகைப்படங்களையும் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியது:
“எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில்தான் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. 1960 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசியல் நன்றாகத்தான் இருந்தது. இப்போது புதிய அரசியல் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு பணியிட மாறுதலுக்கு ரூ.10 இலட்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதை கொடுப்பவர்கள் எதற்காக பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்பதில்லை. எவ்வளவு குறைக்கலாம் என்றுதான் கேட்கிறார்கள்.
எந்த திட்டம் வந்தாலும் அது கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம்தான் நிறைவேற்றப்படுகிறது. அவர்கள் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்கள்.
வறுமை, கல்வி, தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் கணக்கிடப்படுகிறது.
தொழில் துறையில் நாம் முன்னேறியிருந்தாலும் 60 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பிதான் இருக்கிறார்கள். ஆனால், விவசாயத்தில் மிகப்பெரிய வெற்றி பெற முடியவில்லை. எனவே, விவசாயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், “தற்போது வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியில் 100 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும்,
கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும் இணையதள வசதியுடன் மடிக்கணினி வழங்க வேண்டும்” என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் சங்க நிறுவனர் ரா.போஸ், மாநில தலைவர் ரவிரங்கராஜன், பொதுச் செயலாளர் பாக்கியநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கூட்ட முடிவில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆதிகேசவன் நன்றித் தெரிவித்தார்.