புதுக்கோட்டையில் 144 தடையால் ஊர் முழுக்க போலீஸ்; அதிமுக – டிடிவியின் சண்டை இன்னும் ஓயல…

First Published Sep 2, 2017, 7:34 AM IST
Highlights
In Pudukottai police force is covered AIADMK - TTV fight is still going


புதுக்கோட்டை

அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் டிடிவி அறிவித்த மாவட்ட செயலாளர் இருவரும் தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வருவதால் புதுக்கோட்டையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு ஊர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். சிலையும் மற்றும் காந்தி பூங்கா அருகே உள்ள அண்ணா சிலையும் இருக்கின்றன.

இவற்றிற்கு அதிமுக அம்மா அணி மாவட்டச் செயலாளர் வைரமுத்து, தினகரனால் அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திக்கேயன் ஆகியோர் ஒரே நேரத்தில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருந்தனர்.

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையிலும், அண்ணா சிலை பகுதியில் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகுரு தலைமையிலும் ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே காவலாளர்கள் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டு இருந்தனர்.

இந்தப் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோ ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலாளர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினர்.

இதனால் நேற்று எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணாசிலை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

எம்.ஜி.ஆர். சிலைக்கு தினமும் காலையில் அதிமுக நிர்வாகி சுசிந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார். இவர் நேற்றும் வழக்கம்போல் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் நேற்று மாலை 6 மணியுடன் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது என்பது கொசுறு தகவல்.

click me!