அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்..! போஸ்டர் ஒட்டியவரை அதிரடியாக கைது செய்த போலீஸ்

By Ajmal KhanFirst Published Jun 7, 2022, 2:08 PM IST
Highlights

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வீடு முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போஸ்டர் ஓட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுகவில் ஒற்றை தலைமை

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இரண்டாக பிளவுபட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வரும் நிலையில் அதிமுக எதிர்கொண்ட நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் மிகப்பெரிய அளவிலான தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து  அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற முழக்கமும், சசிகலா தலைமையேற்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி ஓபிஎஸ்யிடம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக அதிமுகவில் பெரிய அளவில் குரல் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைதியே பதிலாக கிடைத்தது.

பொதுச்செயலாளர் இபிஎஸ்
 
இந்தநிலையில் வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மீண்டும் அ தி மு க வின் தலைமை குறித்த போஸ்டர் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் தென்கரை பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் செல்லும் சாலை மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் விரைவில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வாழ்த்துகிறோம் என்ற  வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பெரியகுளம் பகுதியில் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போஸ்டர் ஒட்டியவர் கைது
 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஓட்டிய சுரொட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும் போஸ்டரில்  சுரேஷ் என்பவரின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது.இதனையடுத்து  அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஓட்டப்பட்டதாக சுரேஷ் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை பெரியகுளம் தென்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் தம்பிக்கு நெருக்கடி..! மணல் கடத்தல் புகாரில் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 

click me!