
விழுப்புரம்
அடுத்த தேர்தலிலும் அதிமுகதான் ஆட்சிக் கட்டிலில் அமரும் என்று விழுப்புரம் மாவட்டச் செயலாளர் இரா.லட்சுமணன் அடித்துக் கூறுகிறார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இரா.லட்சுமணன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராஜேந்திரன் (விழுப்புரம்), ஏழுமலை (ஆரணி), எம்எல்ஏ சக்கரபாணி (வானூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளரான இரா.லட்சுமணன் பேசியது:
"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் பிப்ரவரி 24-ஆம் தேதி வருகிறது. இந்த பிறந்த நாளை வெகு விமரிசையாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், விவசாயிகள், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், அனைத்துக் கிளைக் கழகங்களிலும் கொடிக் கம்பங்களுக்கு வண்ணம் பூசி, கொடி ஏற்றி சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
ஏப்ரல் மாதம் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும் என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும்.
எதிர்க்கட்சிகளும், சசிகலா குடும்பத்தாரும் அதிமுக கட்சியை அபகரித்து விடலாம், ஆட்சியை கலைத்து விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர். அடுத்த தேர்தலிலும் அதிமுகதான் ஆட்சிக் கட்டிலில் அமரும்" என்று அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் சிவி சண்முகம், "இந்தாண்டே, நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
கட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், பழைய உறுப்பினர்களை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் போன்ற பணிகளை நிர்வாகிகள் மேற்கொள்ளவேண்டும்.
குறிப்பாக, புதிய உறுப்பினர்களாக இளைஞர்களை சேர்க்க வேண்டும். உறுப்பினர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஹரிதாஸ், விழுப்புரம் முன்னாள் நகர் மன்றத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பசுபதி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ராமசரவணன், ஒன்றிச் செயலாளர் பேட்டை முருகன்,
ராமதாஸ், முத்தமிழ்செல்வன், புண்ணியமூர்த்தி, ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலர் மணவாளன், இலக்கிய அணி நகரச் செயலாளர் திருப்பதி பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.