
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் கோவையில் இன்று கைது செய்தனர். அப்போது உச்சநீதிமன்றத்துக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரும் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கர்ணன் சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாக கூறி, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.
இதையடுத்து நீதிமன்றத்தை அவமதித்ததாக அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்தனர் ஆனால் கர்ணனை கைது செய்யமுடியாமல் கொல்கத்தா காவல் துறையினர் திணறினர்.
இந்நிலையில் கோவை மதுக்கரை அருகே மச்சநாயக்கன் பாளையத்தில் உள்ள எலைட்கார்டன் எனும் தனியாருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் தங்கியிருந்த நீதிபதி கர்ணனை காவல் துறையினர் கைது செய்தனர்.
கர்ணனின் செல்போன் சிக்னலை வைத்து கோல்கத்தா போலீசார், உள்ளூர் போலீசாரின் உதவியுடன். கர்ணன் தங்கியிருந்த இடத்திற்கு சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர் கைது செய்யப்பட்டவுடன் மேற்குவங்க போலீசாருடன் வாக்குவாதம் செய்து ஒத்துழைக்க மறுத்தார். இதைத் தொடர்ந்து அவர் கோவை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து 11 மணிக்கு சென்னை செல்லும் விமானத்தில் அழைத்துக் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்னை கைது செய்ததில் காவல்துறை மீது எந்த குறைபாடும் சொல்ல முடியாது என தெரிவித்தார்.
நீதித்துறையில் ஊழலும், சாதியும் அப்பிக்கிடப்பதாக கூறிய கர்ணன், ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவர பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார். தான் குற்றவாளி அல்ல என்றும் விரைவில் வழக்கை சந்திப்பேன் என்றும் கர்ணன் கூறினார்.
அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் எனவும் நீதிபதி கர்ணன் கூறினார்.