இந்தியாவில் மாட்டை தெய்வமாகவும், மனிதனை அடிமையாகவும் நடத்துகிறார்கள்…

First Published Dec 31, 2016, 7:35 AM IST
Highlights


மதுரை,

இந்திய சமூகம் சிறந்த கலாசாரம் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாட்டை தெய்வமாகவும், மனிதனை அடிமையாகவும் நடத்துகிறார்கள் என திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார்.

மதுரை மாவட்ட ஆதித்தமிழர் கட்சி சார்பில், கட்சி தலைவர் ஜக்கையன் தலைமையில் “மனிதக்கழிவுகள் அகற்றுவோர் வாழ்வுரிமை கருத்தரங்கம்” பொன்மேனியில் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட செயலாளர் சிதம்பரம் வரவேற்றார். மாவட்ட மகளிரணி செயலாளர் துர்கா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித் கலந்து கொண்டு பேசினார்.

“இந்திய சமூகம் சிறந்த கலாசாரம் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாட்டை தெய்வமாகவும், மனிதனை அடிமையாகவும் நடத்துகிறார்கள். நமது சமூகம் பண்பட்டதாக மாறவில்லை. சமூக சீர்திருத்தத்துக்காக பல ஆண்டுகளாக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்.

தனி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதில்லை.

மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்கள் பலியாவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, மரணத்தை முன்னிறுத்தி உரிமைக்கான போராட்டத்தை நடத்த வேண்டும்.

துப்புரவு பணி என்பது மிகவும் முக்கியமானது என்பதால் நமக்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் இந்த வேலையை செய்ய மாட்டோம் என உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவது என்பது நாம் அடிமை என்பதை நாமே ஏற்றுக் கொள்வதற்கான ஒரு அடையாளம்.

அடுத்த தலைமுறை வரை கொண்டு செல்லாமல் இந்த தலைமுறையிலேயே இந்த தொழிலை தூக்கியெறிய தயாராக வேண்டும்” என்று பா.இரஞ்சித் பேசினார்.

இதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி பேசும்போது, துப்புரவு பணி என்பது அத்தியாவசிய பணி என்ற அடிப்படையில் அரசால் நடத்தப்படுகிறது. எனவே இந்த பணியை செய்யாமல் இருப்பது என்பது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. ஆனால் கடைநிலை ஊழியருக்கும் கீழாக இந்த பணி உள்ளது. அத்தியாவசிய பணி என்பதிலிருந்து இந்த பணியை நீக்க வேண்டும். துப்புரவு பணியில் ஈடுபடுபவர்களுக்கு மாற்றுத்தொழில் தொடங்க அரசு நிதி வழங்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாநில நிதி செயலாளர் விடுதலைவீரன், மாவட்ட செயலாளர்கள் முருகன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

click me!