
கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிது. இதையயொட்டி நகரின் பல பகுதிகளில் வாட்டர் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், பழரசங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. வெயில் கொடுமை தாங்காமல் வாகன ஓட்டிகள், இதுபோன்ற குளிர் பானங்களை வாங்கி குடிக்கின்றனர்.
இதுபோன்று விற்பனை செய்யும் குளிர்பானங்கள், பழரசங்கள், வாட்டர் பாக்கெட்டுகள் தரமில்லாதவை என சுகாதார துறை மற்றும் உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இதைதொடர்ந்து கடந்த வாரம் சென்னை நகர் முழுவதும் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செங்குன்றம், மாதவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக எடுத்து, அதை சுத்திகரிப்பு செய்யாமல், கேன்களில் நிரப்பி விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அவ்வாறு கேன்களில் தண்ணீர் நிரப்பி கொண்டு செல்லும் வாகனங்களை சோதனையிட்டு, தரமில்லாத சுமார் 500 தண்ணீர் கேன்களை பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து தண்ணீர் கேன் விற்பனை செய்த கம்பெனிகளுக்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் அன்புசெல்வன், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தரமில்லாத குடிநீர் கேன்கள், குளிர்பானங்கள், தரமற்ற தயிர், மோர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை குறித்து வாட்ஸ்ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம். அதேபோல், கார்பைடு கல்வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் உள்ளிட்டவை தொடர்பான புகார்களையும் தெரிவிக்கலாம்.
இதுதொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், 044 - 23813095 என்ற அலுவலக எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். commrfssa@gmail.comஎன்ற இமெயில் முகவரியிலும் புகார் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.