
நொய்யலில் கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
திருப்பூரில் உள்ள சாய, சலவைத் தொழிற்சாலை உரிமையாளர்களுடனான சந்திப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி தலைமையில் நடந்தது.
“நொய்யல் ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றினால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக மூடப்படும். அனைத்து பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கழிவுநீரை சிறந்த முறையில் சுத்திகரிப்பு செய்து பூஜ்ய கழிவுநீர் வெளியேற்ற நிலையை அடைய வேண்டும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து பெறப்படும் நல்ல நீர், உப்பு கரைசலை தொழிற்சாலைகளில் மறுஉபயோகம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் கழிவுநீரையோ அல்லது உப்பு நீரையோ ஆறு, ஓடைகளில் வெளியேற்றக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவது தொடர்பாக உரிய குறிப்பேடுகளைப் பராமரிக்க வேண்டும். சாய, சலவைத் தொழில் உரிமையாளர்களின் சங்கங்கள், தங்களின்கீழ் உள்ள உறுப்பினர்களின் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீரோ, திடக்கழிவோ நீர்நிலைகளில் வெளியேற்றவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சாயத் தொழில் உரிமையாளர்கள் சங்கம் போதிய அளவு பணியாளர்களை நியமனம் செய்து, எவ்வித சாயக்கழிவு நீரும் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்படாதவாறு மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலர்களுடன் இணைந்து கண்காணிக்க வேண்டும். திடக் கழிவுகளை வாரியம் அனுமதித்துள்ளவாறு மறுசுழற்சி செய்வதற்காக சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இதில், மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் இளங்குமரன், மதிவாணன், ஜெயலட்சுமி, சாயப் பட்டறை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜ், சலவைப் பட்டறை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சின்னசாமி, 18 பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.