ஆளுநர் தீர்வு காணாவிட்டால் நாங்கள் தீர்வு காண நேரிடும்: உச்ச நீதிமன்றம்!

By Manikanda Prabu  |  First Published Dec 1, 2023, 12:47 PM IST

ஆளுநர் தீர்வு காணாவிட்டால் நாங்கள் தீர்வு காண நேரிடும் என தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது


சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி  தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில், “தமிழ்நாடு மாநில சட்டமன்றம் அவரது ஒப்புதலுக்காக அனுப்பிய மாநில அரசின் கோப்புகள், உத்தரவுகள் மற்றும் கொள்கைகளை ஆளுநர் பரிசீலிக்காதது அரசியலமைப்பிற்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது.” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளும் ஆளுநர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

Tap to resize

Latest Videos

தமிழக அரசின் வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 2020 ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இதனிடையே, பஞ்சாப் வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலைவர் என்றும், அவரது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசின் சட்டமியற்றும் வழக்கமான போக்கை முறியடிக்க முடியாது என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சாப் ஆளுநர் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிகாட்டிய தமிழக அரசின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, அரசியலமைப்பை மீறி காலம் கடந்து குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை ஆளுநர் அனுப்பியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், கடந்த மாதம் 13ஆம் தேதியன்று ஆளுநர் மசோதாக்களை சட்டப்பேரவைக்கு அனுப்புகிறார். அவை மீண்டும் இயற்றப்பட்டு ஆளுநருக்கு 18ஆம் தேதி மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது. பின்னர் 28ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு குறிப்பிட்டு அனுப்புகிறார். விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது நேற்று, அவர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது அரசியலமைப்பை மீறுவதாகும் என அபிஷேக் சிங்வி வாதிட்டார்.

பஞ்சாப் விஷயத்தில் சொல்லப்பட்டதை மனதில் வைத்து நீதிமன்றம் பார்க்கக்கூடிய ஒன்று இருக்கிறது என கூறி, சட்டப்பிரிவு 200ஐப் பார்க்க வேண்டும் என்று நினைப்பதாக ஆளுநர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். ஆனால், பஞ்சாபில் இந்தப் பிரச்சினை எழவில்லை என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, “ஆளுநர் தரப்பில் இருந்து மசோதாக்கள் நிறுத்திவைக்கப்பட்டது என கூறப்பட்ட போது, அது தொடர்பான கோப்புகள் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டதா? சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்?” என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், “சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பபட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லையே. முதன் முறை மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால் மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்து விட்டு அதனை மீண்டும் சட்டமன்றத்துக்கு அனுப்பி விட்டு, அது மறு நிறைவேற்றம்  செய்த பின்னர் அந்த மசோதாவை எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்.?” ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞருக்குத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மத்தியப்பிரதேச தேர்தல்: எங்களுக்குத்தான் வெற்றி - அடித்துச் சொல்லும் கமல்நாத், சவுகான்!

இதற்கு ஆளுநர் தீர்வு காண வேண்டும் என விரும்புகிறோம். இல்லையென்றால் நாங்கள் தீர்வு காண நேரிடும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அத்துடன், இவ்விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சரை அழைந்து இந்த பிரச்னையை பேசி தீர்க்க ஆளுநர் தரப்புக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், விசாரணையை வருகிற 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

“தமிழ்நாடு ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையில் தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.  முதல்வருடன் ஆளுநர் அமர்ந்து இதற்கு தீர்வு கண்டால் பாராட்டுவோம். முதல்வரை ஆளுநர் அழைத்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

click me!