
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்தாலும் வெளி தொகுதிகளில் பணம் பதுக்கி வைக்கபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து ஏப்ரல் 12 ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்போடு ஒவ்வொரு கட்சியும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்தல் நடைமுறை விதிகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நடைபெற்று வருகிறது. மார்ச் 23 வரை வேட்பு மனுதாக்கல் பெறப்படும். 13 மனுதாக்கல்கள் பெறப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியை 21 மண்டலாமாக பிரித்து நியமனம் செய்யப்பட்டுள்ளது.
பரிசீலனையும் சின்னம் ஒதுக்கீடும் தொடர்ந்து நடைபெறும்.
3 பறக்கும் படை பணியில் உள்ளது. வாக்கு பதிவு சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்
1638 வாக்கு சாவடி அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். 25 ஆம் தேதி வாக்குசாவடி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பறக்கும்படைகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
பணபட்டுவாடா குறித்து அதிக புகார்கள் வந்தால் கண்காணிப்பு குழுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு என வெளி தொகுதிகளில் பணம் பதுக்கி வைக்கபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பணபட்டுவாடா கண்டறியப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.