
கள்ளக்காதலை கண்டித்ததால், மனைவியின் கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொலை செய்த கணவர், எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
சென்னை துரைப்பாக்கம் அடுத்த கண்ணகிநகர் எழில் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பாரத் பெயிண்டர் வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி மோனிஷா துப்புரவு தொழிலாளியாக பணிபுரிகிறார். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 5 வயதில் ஜெனித் அஸ்வின் என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் பாரத்துக்கு கண்ணகிநகர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மனைவி மோனிஷா, அந்த பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடும்படி தனது கணவரை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் அவர், அதை கேட்காமல் அந்த பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே தொடர்ந்து சண்டை சச்சரவு இருந்து வந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 22–ந்தேதி இரவு வீட்டில் மோனிஷா, பாரத் மட்டும் தனியாக இருந்தனர். அஸ்வினை மோனிஷாவின் தாயார் வீட்டுக்கு அனுப்பி விட்டு தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள மனைவி மீது ஆத்திரத்தில் இருந்து வந்த பாரத், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி வீட்டில் இருந்த மின் கம்பியை எடுத்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த மோனிஷாவின் கழுத்தை இறுக்கியுள்ளார் இதனால் துடித்துத்த மனைவியை விடாமல் இறுக்கியுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினரிடம் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இதேபோல் மோனிஷாவின் தாயாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மோனிஷா மயங்கி கிடப்பதை அறிந்து அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், மோனிஷாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சி நடந்து இருப்பதாக தெரிவித்தனர். இதனால் பயந்து போன பாரத், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மோனிஷாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தநிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி மோனிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாரத்தை தேடி வந்தனர். இதனிடையே போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பாரத், நேற்று எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.