மனைவியை கொன்ற கணவன் 8 மாதங்களாக தலைமறைவு; சிறையில் அடைக்கப்பட்ட இரண்டே நாளில் மரணம்... 

First Published Jun 9, 2018, 8:38 AM IST
Highlights
Husband killed his wife 8 months escape Death on 2 days in prison ......


ஈரோடு
 
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கணவன் இரண்டே நாளில் இறந்தார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பசுவண்ணா (55). கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி நாகம்மா. இவரின் நடத்தையில் பசுவண்ணாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் கடந்த 14-1-2017 அன்று இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா செல்வதற்காக நடந்து வந்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்தனர். 

பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்றபோது இருவருக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதை தெரிவித்து வாக்குவாதமும் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் போதையில் ஆத்திரமடைந்த பசுவண்ணா அருகே கிடந்த கல்லை தூக்கி நாகம்மாவின் தலையில் போட்டார். இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மனைவி நாகம்மா உயிரிழந்தார். 

இதுகுறித்து பவானிசாகர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து பசுவண்ணாவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

குற்றம் சுமத்தப்பட்ட பசுவண்ணா ஜாமீன் பெற்றார். அதன்பின்னர் கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் நீதிமன்றம் பசுவண்ணாவை கைது செய்ய பவானிசாகர் காவலாளர்களுக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில் காவலாளர்கள் பசுவண்ணாவை வலைவீசி தேடி வந்தனர். 

இந்த நிலையில் அவர் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் அங்கு சென்று அவரை கடந்த 6-ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பசுவண்ணாவை 15 நாட்கள் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பசுவண்ணாவுக்கு நேற்று மதியம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  உடனே அவரை சிறையில் இருந்த காவலாளர்கள் கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி பசுவண்ணா உயிரிழந்தார்.

இதுகுறித்து கோபி காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!