காலை உணவுத்திட்ட சமையற்கூடம் மீது மனிதக்கழிவு: மீண்டும் ஒரு அவலம்!

By Manikanda Prabu  |  First Published Oct 31, 2023, 12:40 PM IST

பள்ளியின் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் மீது மனிதக்கழிவு பூசப்பட்ட அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட  இறையூர் கிராமத்தின் வேங்கைவயல் தெருவில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்தனர்.

கடந்த ஆண்டு நடந்த கொடூர சம்பவம், மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்றதொரு அவலம் மீண்டும் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் காலை உணவுத்திட்ட சமையற்கூடத்தில் மர்ம நபர்கள் மனித கழிவை பூசி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம், கொளத்தூர் வட்டாட்சியர் முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

Tap to resize

Latest Videos

அதன்பிறகு, தூய்மைப் பணியாளர்கள் மூலம் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், இரவு நேர காவலாளி இல்லாததாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து பள்ளிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர கோட்டாட்சியர் தணிகாசலம் உத்தரவிட்டார்.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விரிவுபடுத்தப்பட்டது.

மராத்தா இட ஒதுக்கீடு: அஜித் பவார் வீடு மீது தாக்குதல்; எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் ராஜினாமா!

நாட்டுக்கே முன்மாதிரியான இந்த திட்டத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், ஒரு சிலர் நயவஞ்சக எண்ணத்துடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன், காலை உணவு திட்ட பணிகளில் நியமிக்கப்படும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண்கள் சமைத்தால் தங்களது பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என எதிர்ப்பு தெரிவிக்கும் சாதிய அவல சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

click me!