கொடுங்கையூரில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்... மனித உரிமை ஆணையம் வழக்கு!!

Published : Jun 13, 2022, 07:15 PM IST
கொடுங்கையூரில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்... மனித உரிமை ஆணையம் வழக்கு!!

சுருக்கம்

சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. 

சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னையை செங்குன்றம், அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். 31 வயதான இவரை, திருட்டு வழக்கு விவகாரம் தொடர்பாக கொடுங்கையூர் போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை போலீஸார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ராஜசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது, போலீஸாரின் அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்து ராஜசேகர் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மரணடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், இதில் போலீசார் அத்துமீறல் ஏதேனும் உள்ளதா? என விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. விசாரணை முடிவில் போலீஸ் அத்துமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். விசாரணை அறிக்கை வந்த பிறகு தேவைப்பட்டால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும் மாற்றப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராஜசேகர் மரணம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. வழக்கை விசாரணைக்கு எடுத்த ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன், விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S