மூன்று நாட்களில் சரியாகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிக்கு விடுமுறை அளிக்க முடியும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்று நாட்களில் சரியாகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிக்கு விடுமுறை அளிக்க முடியும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்க கோரி 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழகத்தில் புதிய தொற்று காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இன்ப்ளுவன்சா H1 N1 வகை வைரஸ் பாதிப்பினால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் அது பரவாமல் இருக்க பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: தமிழக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.. அண்ணாமலை வைத்த உருக்கமான வேண்டுகோள்.
ஆனால் இதுவரை அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது, இந்த வகையில்தான் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இருதயநோய் வல்லுநர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார், அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் ஜனவரி முதல் 1166 நபர்கள் H1 N1 நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர், தற்போது 377 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 பேர் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: ஆ.ராசாவை கொச்சைப்படுத்தினால்... சென்னையில் மனுதர்மம் எரிக்கப்படும்.. பகிரங்கமாக அறிவித்த பெரியார் திக.
கடந்த 10 மாதங்களில் பத்து நபர்கள் இந்த நோயால் இறந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 333 இடங்களில் மருத்துவம் பார்க்கவும், மருந்துகள் வழங்கியும் வருகின்றனர். ஆனாலும் தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்களும், சென்னையில் 100 சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளது என்றார். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்தி உள்ளனர். மூன்று நாட்களில் சரியாகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிக்கு விடுமுறை அளிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால், முதலில் அரசு அதைத் தான் செய்யும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை என்றார், எனவே விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு யாரும் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.