உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை முதல் 2 நாட்கள் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அமித்ஷா பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனிக்கு செல்கிறார்.
தமிழக நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்டமாக வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பிரதமர் மோடி 5 முறை தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் மீண்டும் வருகிற 9ம் தேதி பொதுக்கூட்டம், ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.
இதையும் படிங்க: மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி! எங்கெல்லாம் போறாரு? யாருக்கெல்லாம் பிரச்சாரம் செய்ய போகிறார் தெரியுமா?
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை முதல் 2 நாட்கள் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அமித்ஷா பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனிக்கு செல்கிறார். அங்கு கூட்டணி கட்சியான அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் தேனி பெரியகுளம் சாலை பாரத ஸ்டேட் வங்கி திடலில் இருந்து மதுரை சாலை வழியாக பங்களாமேடு திடல் வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அங்கிருந்து மாலை 6.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை திரும்புகிறார்.
இதையும் படிங்க: பாமக - பாஜக கூட்டணியைக் கண்டு திமுக அதிமுகவுக்கு பெரும் அச்சம்.. தொண்டர்களை ஊக்கப்படுத்தும் ராமதாஸ்..!
இதனையடுத்து மதுரை பழங்காநத்தம் பாஜக பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் ராமஸ்ரீனிவாசனை அறிமுகப்படுத்தி பேசுகிறார். மறுநாள் காலையில் மீனாட்சி அம்மன் கோயில் சென்று தரிசனம் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா அங்கும் ரோடு ஷோ நடத்தி கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்கிறார். அங்கு கூட்டணி கட்சி வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டுகிறார். இந்நிகழ்ச்சி முடிந்துக்கொண்டு டெல்லி புறப்படுகிறார்.