
காஞ்சிபுரம்
அனாதை பிணம் என்று நினைத்து இந்து மக்கள் கட்சி பிரமுகரின் சகோதரர் உடலை காவலாளர்கள் கொண்டு சென்று எரித்ததால் அவரது சகோதரர் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் 64 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக செங்கல்பட்டு நகர காவலாளர்களுக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் நேற்று காலை 10½ மணியளவில் காவலாளார்கள் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்து கிடந்தவரின் உடலைக் கைப்பற்றினர். இதனையடுத்து செங்கல்பட்டு நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஒருவரின் உதவியுடன் இறந்து கிடந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று எரித்து விட்டனராம்.
இறந்து கிடந்தவர் செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவராக உள்ள சண்முகம் என்பவரது சகோதரர் நந்தன் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் தனது சகோதரரின் உடலை உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி எரிக்கலாம்? என்று செங்கல்பட்டு நகர காவலாளர்களிடம் அவர் கேள்வி எழுப்பினார். அப்போது காவலாளர்கள் "அனாதை பிணம் என்று நினைத்து எரித்து விட்டோம்" என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து உயர் காவல் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக சண்முகம் தெரிவித்துள்ளார்.
அனாதை பிணத்தை எரிக்க நடைமுறை:
"பொதுவாக ஒரு அடையாளம் தெரியாத பிணம் கண்டெடுக்கப்பட்டால் கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வைத்திருக்க வேண்டும்.
அதற்குள் காவலாளர்கள் இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களிலும் துண்டு பிரசுரம் ஒட்ட வேண்டும். மூன்று மாதங்களுக்குள் யாரேனும் தேடி வராவிட்டால் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து அந்த உடலை எரிக்க வேண்டும்". இதுதான் அனாதை பிணத்தை எரிக்க நடைமுறை. ஆனால், இதில், எதையும் பின்பற்றாமல் காவலாளார்கள் அந்தப் பிணத்தை எரித்துள்ளனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் மதிவாணனிடம் கேட்டபோது, "காவலாளர்கள் யாரும் பிணத்தை எரிக்கவில்லை. சிவனடியார்கள் வந்து அனாதை பிணத்தை அடக்கம் செய்வதாக கூறி எடுத்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அவர் கூறினார்.