இமயமலை சிகரத்தில் தேசியக் கொடியை நாட்டிய சாதனைத் தமிழன்! குவியும் பாராட்டு!

First Published Jul 20, 2018, 6:06 PM IST
Highlights
Himalaya national flag


பனி மூடிய இமயமலையின் சிகரத்தில் ஏறி, தேசியக் கொடியை நட்டு, பழனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்துவருபவர் நிரஞ்சன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நிரஞ்சன், படிப்பில் மட்டுமின்றி, மலையேற்றப் பயிற்சிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

பள்ளிக் காலத்தில் இருந்தே என்.சி.சி. மாணவராக இருந்த நிரஞ்சன், பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் சேர்ந்த பிறகும், என்.சி.சி. மாணவராகவே தொடர்ந்தார். என்.சி.சி. பயிற்சியின்போது, மலையேற்றப் பயிற்சியில் சிறந்து விளங்கியதால், இமயமலையில் ஏறுவதற்கு என்.சி.சி. மாணவர்களுக்கு இடையே அகில இந்திய அளவில் நடைபெற்ற தேர்வில், 11 பேரில் நிரஞ்சனும் ஒருவராக இடம்பெற்றிருந்தார். 

 அதன்பிறகு தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர் நிரஞ்சன், பனிமூடிய இமய மலை சிகரத்தில் வெற்றிகரமாக ஏறினார். இமயமலையில் சுமார் 6,167 மீட்டர் உயரம் கொண்ட ஒரு சிகரத்தில் ஏறிய மாணவர் நிரஞ்சன், அங்கு நமது தேசியக் கொடியை ஏற்றினார். கடும் பனிப்பொழிவு, ஆறு மற்றும் ஆபத்தான சறுக்குப் பாதைகளை கடந்து, மாணவர் நிரஞ்சன் இந்த சாதனையை படைத்துள்ளார். 

இமயமலை சிகரத்தில் தேசியக் கொடியை ஏற்றி சாதனைப் படைத்த மாணவர் நிரஞ்சனுக்கு, பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், பழனியாண்டவர் கலைக்கல்லூரி முதல்வர் அன்புச்செல்வி, என்.சி.சி. அதிகாரி பாக்யராஜ், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

click me!