
சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பெருங்குடி கிராமத்தில், தாமோதரன் என்பவர், தனக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், திருநெல்வேலி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அப்பாவு, பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி நெல்லை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் சபாநாயகர் அப்பாவு மீது எப்ஐஆர் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் குற்றபத்திரிகையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடும்படி வழக்கறிஞர் தாமோதரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்திருந்தார். இதற்கிடையில் இந்த நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யும்படி சபாநாயகர் அப்பாவு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர் தாமோதரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செல்வம் இந்த வழக்கின் பிரதான குற்றவாளியான அப்பாவு தற்போது ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால் இந்த நில அபகரிப்பு வழக்கை எம்எல்ஏ, எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்தான் விசாரிக்க முடியும் என்று வாதிட்டதை தொடர்ந்து இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள எம்எல்ஏ,எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சபாநாயகர் அப்பாவு மீதான இந்த நில அபகரிப்பு வழக்கு நீதியரசர் நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரர் தாமோதரனின் வழக்கறிஞர் செல்வம் ஆஜராகி, வழக்கின் குற்றவாளியான அப்பாவு தற்போது ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ மட்டுமன்றி தமிழக சட்டபேரவையின் சபாநாயகராகவும் உள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் மீது நில அபகரிப்பு புகார் தொடர்பாக கீழமை நீதிமன்றம் சபாநாயகர் அப்பாவு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து தான் நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கறிஞர் செல்வம் வாதிடுகையில் சபாநாயகர் அப்பாவு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் விசாரணை நடத்தி இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதியரசர் நிர்மல்குமார் இவ்வழக்கு தொடர்பாக இரு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு மீதான இந்த நில அபகரிப்பு வழக்கு மீண்டும் இன்று நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியதை தொடர்ந்து வாதிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சபாநாயகர் அப்பாவு இந்த வழக்கை ரத்து செய்யும்படி தாக்கல் செய்துள்ள மனு மீது தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து வாதாடினார். சபாநாயகர் அப்பாவு மீது போலீசார் நேரடியாக வழக்கு பதிவு செய்திடவில்லை. மனுதாரர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றவாளியான அப்பாவு மீது வழக்கு தொடர்ந்து அதன்பின்னர் கோர்ட் உத்தரவின் பேரிலேயே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் அரசியல் உள் நோக்கம் ஏதும் இல்லையெனவும் வாதிட்டார். மேலும் இவ்வழக்கில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது இரு வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிட்டதையும் சுட்டிக் காட்டினார். விசாரணையின் முடிவில் இந்த வழக்கில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வசதியாக வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்க நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.