மறைமுக தேர்தலின் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Published : Mar 15, 2022, 03:50 PM IST
மறைமுக தேர்தலின் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும்...  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சுருக்கம்

திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் திமுக பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலுக்கு பின்னர் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் திருமழிசை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் எட்டு வார்டுகளை கைப்பற்றிய அதிமுக உறுப்பினர்களில், இருவரின் வாக்குகள் செல்லாதவை என கூறி ஏழு உறுப்பினர்களை கொண்ட திமுகவைச் சேர்ந்த உறுப்பினர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக கவுன்சிலர் ரமேஷ் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாமக கவுன்சிலர் ராஜேஷ் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இரு அதிமுக கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்க காரணம் என்ன எனக் கேட்டு அளித்த மனுவை தேர்தல் அதிகாரியும், மாநில தேர்தல் ஆணையமும் பரிசீலிக்கவில்லை. வாக்குச்சீட்டை திருத்திய தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி, வழக்கை திரும்பப் பெறுவதாக கூறிய மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் வழக்குக்கு ஆதாரமாக உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தலில் போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?