மயானங்களில் இனி சாதிப்பெயர் பலகை இருக்க கூடாது… அதிரடி உத்தரவு பிறபித்தது உயர்நீதிமன்றம்!!

By Narendran SFirst Published Dec 7, 2021, 8:06 PM IST
Highlights

மயானங்களில் உள்ள சாதிப்பெயர் பலகைகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மயானங்களில் உள்ள சாதிப்பெயர் பலகைகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு மயானம் அமைக்க நிரந்தரமாக இடம் ஒதுக்க கோரி, கலைச்செல்வி மற்றும் மாலா ராஜாராம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது அருந்ததினருக்கு மயானம் அமைக்க தகுந்த நிலத்தை ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இந்த விளக்கத்தை நீதிபதி ஏற்க மறுத்த நீதிபதி மகாதேவன், சாதி பாகுபாடு இன்றி அனைத்து குடிமக்களும் பொது மயனாங்களை பயன்படுத்த உரிமையுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், அருந்ததியர் சமுதாய மக்களுக்கு மடூர் கிராமத்தில் பொதுவான இடத்தில் மயானம் அமைக்க ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தமிழகத்தில் உள்ள மயானங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு கிராமத்திலும் சாதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் பொது மயனாங்களை அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

பொது மயானங்களை அமைத்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், விதிகளை மீறி செயல்படுவோருக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். சாதி, மத சகிப்புத்தன்மை, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவை சம்பந்தமான தகவல்களை பாடப்புத்தகங்களை சேர்க்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்து, நீதிபதி மகாதேவன் வழக்கை முடித்து வைத்துள்ளார். 

click me!