பிடித்தால் படம் பாருங்க.. இல்லைனா பார்க்காதீங்க.. மெர்சல் திரைப்படத்துல என்ன குறையை கண்டீங்க? ஹைகோர்ட் அதிரடி..!

First Published Oct 27, 2017, 11:37 AM IST
Highlights
high court dismiss the case against mersal movie


மெர்சல் திரைப்படத்தில் என்ன குறையைக் கண்டீர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்த தவறான கருத்துகளை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், மெர்சல் திரைப்படத்தில் வரும் காட்சிகள் இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராக உள்ளதாகவும், ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து தவறான கருத்துக்களை கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் படத்தில் பொய்யான வசனங்கள் உள்ளதாகவும், இதற்கு தணிக்கை வாரியம் எவ்வாறு சான்று வழங்கியது என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்த வழக்கறிஞர், மெர்சல் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், ஒரு படத்தில் காட்சிகளை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பதை தணிக்கை வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும். மெர்சல் படத்திற்கான தணிக்கை சான்றை ரத்து செய்ய கோரிய வழக்கில் பொதுநல அக்கறை இல்லை. பொதுநல அக்கறை இருந்தால், மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற விஷயங்களை எதிர்த்து வழக்கு தொடரலாம். மாற்றுத்திறனாளிகளை தவறாக சித்தரிப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கலாமே?

மெர்சல், திரைப்படம் தானே தவிர வாழ்க்கை அல்ல. அதேநேரத்தில் மெர்சல் திரைப்படம் எந்த வகையில் மக்களை பாதிக்கும்? மெர்சல் திரைப்படத்தில் என்ன குறையைக் கண்டீர்கள்? கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்குமானது. படம் பிடிக்கவில்லையெனில் பார்க்காதீர்கள். படத்தில் வரும் வசனங்களை மக்கள் கண்மூடித்தனமாக ஏற்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

படத்தில் காட்சிகளை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பதை தணிக்கை வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே மெர்சல் திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றை திரும்பப் பெறக்கோரிய வழக்கை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் கிடையாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

click me!