
தமிழகத்தில் சேலம், கோவை, திருச்சி என பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்து தற்போது வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் டெங்கு காய்ச்சலுக்கு 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
தமிழக அரசின் சுகாதாரத்துறை டெங்குவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் டெங்கு தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொது மக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்
சேலம் மாவட்டம் , ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி சாருமதி உயிரிழந்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்த சிறுமி சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் , ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்த சிறுமி சந்தியா காய்ச்சல் காரணமாக கோவை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிறுமி சந்தியா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இதே போன்று திருச்சி மாவட்டம், பொன்னம்பலம்பட்டியை சேர்ந்த 5 வயது சிறுமி சுபேதா டெங்கு காய்ச்சல் காய்ச்சல் காரணமாக இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.