
தமிழகத்தில் சுங்கச் சாவடிகளீல் பெரும்பாலும் ரவுடிகளையும் சமூக விரோதிகளையுமே பணியில் அமர்த்துவதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தனது கண்டனத்தைத் தெரிவித்தது.
மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். இவர், அண்மையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
தமிழகத்தில் உ ள்ள சுங்கச் சாவடிகளின் செயல்பாடுகள் குறித்து தனது மனுவில் அவர் ஆட்சேபம் எழுப்பியிருந்தார். சுங்கச் சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்கள், முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்றும், ஆம்புலன்ஸ் போன்ற அவசர கதியில் செல்லும் வாகனங்களுக்கு தனி வழியோ முறையான பாதைகளோ இல்லை என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.
அவரது மனு மீது நடந்த விசாரணையின் போது, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சுங்கச் சாவடிகளின் போக்கை கண்டிப்பதாகக் கூறியது. மேலும், பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் ரவுடிகளும் சமூக விரோதிகளுமே பணியில் அமர்த்தப்படுவதாகவும் விதிமுறைகளை மீறும் ஒப்பந்ததாரர்கள் மீது அரசு எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் கருத்து தெரிவித்தது.