
முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் 6ம் தேதி காமராஜர் சாலை மெரினா கடற்கரை எம்ஜிஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், 3 நாட்களுக்கு அரசு துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது. இன்று அனைத்து அரசு அலுவலகமும் செயல்பட உள்ளது.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கட்டட அரங்கில், மாலை 3.30 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கலந்து கொள்வார்கள் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேல் அறிவித்துள்ளார்.