மூலிகை பெட்ரோல் உண்மை என நீதிமன்றம் தீர்ப்பு கூறிய நிலையிலும் மூலிகை பெட்ரோலுக்கான தயாரிப்பு உபகரணங்களை கையில் தராமல் தாமதிப்பதாகவும் என் உயிருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ராமர் பிள்ளை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் பெட்ரோல், டீசல்
தமிழகத்தை மட்டுமில்லாமல் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தவர் ராமர்பிள்ளை, 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் பெயர் தெரியாதவர்கள் இருந்ததில்லை, அந்தவகையில் தான் குறைந்த விலையில் மூலிகை பெட்ரோல் தயாரித்துள்ளதாக கூறி நாட்டையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருந்த நேரத்தில் 15 ரூபாய்க்கு பெட்ரோல் தருவேன் என்றால் சும்மாவா.? எனவே அனைவரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. இந்தநிலையில் தற்போது நீதிமன்றத்தில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக கூறி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பாளரான ராமர் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 23 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் போலியானது என்று சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
என் உயிருக்கு ஆபத்து
நீதிமன்றத்தில் தொடர் போராட்டத்திற்கு பிறகு வழக்கில் வெற்றி பெற்றுள்ளதாகவும் மூலிகை பெட்ரோல் உண்மை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பின்பும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான உபகரணங்களை என் கையில் கொடுக்காமல் நீதிமன்றம் சொன்ன பணத்தையும் என் கையில் கொடுக்காமல் சிபிஐ காலம் தாழ்த்தி வருவதாகவும் தெரிவித்தார். எனவே இந்த விவகாரத்தில் முதல்வர்,பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதுவே எனது கடைசி செய்தியாளர் சந்திப்பாக கூட இருக்கலாம். என கூறியவர் எனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் என்ன வேணாலும் நடக்கலாம் என்று ராமர் பிள்ளை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
முதல்வர் முன்னிலையில் பரிசோதனைக்கு தயார்
தமிழக முதல்வர் முன்னிலையில் மீண்டும் மூலிகை பெட்ரோல் செய்து காட்ட தயார் என தெரிவித்தர், மூலிகை பெட்ரோலை வெற்றிகரமாக பரிசோதனை செய்து காட்ட தவறினால் எனக்கு என்ன தண்டனை வேண்டும் என்னாறும் கொடுங்கள் என தெரிவித்தார். இதனை அனைத்து தொலைக்காட்சியிலும் நேரலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தனக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் நான் நிம்மதியாக இல்லையென கூறியவர், மூலிகை பெட்ரோல் தயாரிப்பு வழிமுறைகளைக் கேட்டு பல்வேறு தரப்பிலிருந்து என் உயிருக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் என் உயிரு ஆபத்து உள்ளதாக கூறினார்.
இதையும் படியுங்கள்
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதில் சிக்கல்.. என்ன காரணம் தெரியுமா?