
வடகிழக்குப் பருவ மழை துவங்கி துவக்கமே அதிக மழைப் பொழிவைத் தந்துள்ளது. கடந்த 3 தினங்களாக மழை அதிகம் பெய்த நிலையில், இன்று காலை சற்று வெறிச்சோடியது வானம். இந்நிலையில், மதியம் 3 மணிக்கு மேல் மேகங்கள் சூழத் தொடங்கின. தொடர்ந்து மழை பெய்யத் துவங்கி நிற்காமல் தூறலுடன் லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை சாலைகளில் கடும் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் கனமழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர்.
சென்னையின் முக்கிய சாலைகளான ஸ்டெர்லிங் சாலை, மவுண்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நியூ ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலை, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை, சென்ட்ரல் பகுதி, அடையாறு மகாத்மா காந்தி சாலை, கிண்டி ராஜ்பவன், சைதை பகுதி, பழைய மகாபலிபுரம் சாலைகளில் பலத்த மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, பணி முடிந்து வீடுகளுக்குத் திரும்புவோர் அதிகம் பயணிக்கும் இந்த சாலைகளில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், ஐந்து நிமிட நேரத்தில் செல்லக் கூடிய பகுதிகளுக்குக் கூட ஒரு மணி நேரத்துக்கும் மேல் தள்ளாடித் தடுமாறிச் செல்ல வேண்டியதாக வாகன ஓட்டிகள் புலம்பினர்.