
வடகிழக்குப் பருவ மழை துவங்கி துவக்கமே அதிக மழைப் பொழிவைத் தந்துள்ளது. கடந்த 3 தினங்களாக மழை அதிகம் பெய்த நிலையில், இன்று காலை சற்று வெறிச்சோடியது வானம். இந்நிலையில், மதியம் 3 மணிக்கு மேல் மேகங்கள் சூழத் தொடங்கின. தொடர்ந்து மழை பெய்யத் துவங்கி நிற்காமல் தூறலுடன் லேசான மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே இன்று மழை, அல்லது இடியுடன் கூடிய கன மழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இதே போல் சர்வதேச வானிலை மையங்களும் எச்சரிக்கைத் தகவலை வெளியிட்டுள்ளன. அதன் படி, சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பெய்யும் மழையானது 40 செ.மீ. அளவுக்கு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பொதுவாக, வட கிழக்குப் பருவ மழையின் போது, பகல் நேரத்தில் வானம் வெறிச்சோடி இருக்கும் என்றும் மாலை அல்லது பின்னரவு நேரங்களில் கன மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இரவு கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையத் தகவல்களை அடுத்து, வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் மேகக் கூட்டங்களின் நகர்வை வைத்து தனது கணிப்பை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவுகள் பெரும்பாலும் சரியான கணிப்பாகவே இருக்கின்றன. அதில், அடுத்த ஒரு மணி நேரத்துக்கு மழை நிற்காது... கடந்த 2015ம் ஆண்டு, டிசம்பர் 1-ந்தேதிக்கு பின், மிக மிக கனமழை சென்னையில் தற்போது பெய்து வருகிறது. நகரில் பல இடங்களில் கடந்த 2 மணி நேரத்துக்குள் 100 மி.மீட்டர் மழை பதிவானது. அடுத்த ஒரு மணி நேரத்துக்கு மழையின் தீவிரம் மேலும் அதிகமாகும்.
சென்னையில் அடுத்த ஒரு மணிநேரம் மழை நிற்கப்போவதில்லை. சென்னையை நோக்கி அதிகமான மேகங்கள் வருவதை பார்க்க முடிகிறது. அடுத்த ஒரு மணி நேரமும் கொட்டித் தீர்க்கப் போகிறது.
மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள். இல்லாவிட்டால் வர வேண்டாம் என்று எச்சரிக்கைப் பதிவினை இட்டுள்ளார்.