
நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்பட்ட முதல் புயலாக மோந்தா உருவாகி உள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்றாலும் தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 16 கிமீ வேகத்தில் புயல் நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் சுமார் 600 கிமீ தொலைவிலும், கர்நாடகாவில் இருந்து 680 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
மோந்தா புயல் அடுத்த 12 மணி நேரத்திற்கு மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியை நோக்கி படிப்படியாக நகரும். நாளை காலை தீவிரப் புயலாக மாறும் மோந்தா நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 முதல் 110 கிமீ வரை தரைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோந்தா புயல் காரணமாக புதுச்சேரியின் மாகேவில் அதிகனமழை பெய்யும் என்பதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று தொடங்கி 29ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.