
ஈரோடு
ஈரோட்டில் சூறாவளிக் காற்றுடன் வெளுத்து வாங்கிய கன மழையால் மரங்கள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் பெரும் சேதம் ஏற்பட்டன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 15 கிலோ மீட்டர் தூரம் மக்கள் நடந்தே சென்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே மாக்கம்பாளையம் மலை கிராமம் உள்ளது. மற்ற பகுதிகளில் இருந்து மாக்கம்பாளையம் செல்லவேண்டுமென்றால் இரண்டு ஓடைகளை கடந்து செல்ல வேண்டும்.
இந்த நிலையில் நேற்று பகல் 3 மணி வலை மாக்கம்பாளையத்தில் கடும் வெயில் அடித்தது. அதன்பின்னர் 4 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்தன. பிறகு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மாலை 5.30 மணி வரை மழை பெய்தது.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மீண்டும் மழை பெய்தது. நேற்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து கனமழை பெய்தது.
சூறாவளிக் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மாக்கம்பாளையத்தில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் முறிந்து சாலையிலேயே விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடைபட்டது.
இந்த மழையால் இரண்டு ஓடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக மாக்கம்பாளையம் செல்லவேண்டிய பேருந்து குரும்பூர் வரை மட்டுமே செல்கிறது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுவருகிறார்கள்.